செய்திகள்

1300 பள்ளிகளை மூட மராட்டிய அரசு முடிவு - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Published On 2017-12-28 12:53 IST   |   Update On 2017-12-28 12:53:00 IST
மராட்டியத்தில் உள்ள 1300 பள்ளிகளை மூடுவது தொடர்பான அறிக்கையை நான்கு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

மராட்டியம் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும், கல்வித்தரம் குறைவான பள்ளிகளும் அதிகமாக உள்ளன. இதனால் 1300 பள்ளிகளை மூடப்போவதாக மாநில கல்வித்துறை அறிவித்திருந்தது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 'பள்ளிகளை மூடுவதினால் அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி வீணாகிறது. குறிப்பாக கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களால் தனியார் பள்ளிகளிலும் சேர முடியாது. அதனால் இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அது குறித்து அனைத்து பிரச்சனைகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதனால் குழந்தைகளின் அடிப்படை கல்வி பாதிக்கப்படக் கூடாது.  

மேலும், இந்த முடிவினால் குழந்தைகளின் கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது. அதனால் இந்த முடிவு குறித்த அறிக்கையை நான்கு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும்' என நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கூறினர்.

Similar News