செய்திகள்

அஞ்சலகத்தில் ‘செல்வ மகள்’ உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு

Published On 2017-12-28 06:19 GMT   |   Update On 2017-12-28 06:19 GMT
செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்பட அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குக்கான வட்டிவிகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒருதடவை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, வருகிற ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது.

அதன்படி, தேசிய சிறு சேமிப்பு திட்டம், பொது வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டி, 0.2 சதவீதம் குறைக்கப்பட்டு, 7.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதமும் 0.2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான ‘செல்வ மகள்’ திட்டத்தின் வட்டி, 8.3 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி, 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகால சேமிப்பு திட்ட வட்டி 8.3 சதவீதமாகவும், சேமிப்பு கணக்குக்கான ஆண்டு வட்டி 4 சதவீதமாகவும் நீடிக்கிறது.

இந்த வட்டி குறைப்பு அடிப்படையில், வங்கிகளும் டெபாசிட் மீதான வட்டியை குறைக்கும் என்று கருதப்படுகிறது.
Tags:    

Similar News