செய்திகள்

எரிபொருள் செலவை மிச்சப்படுத்த பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி

Published On 2017-12-25 15:49 IST   |   Update On 2017-12-25 15:49:00 IST
பெட்ரோலிய பொருட்கள் மீதான இறக்குமதி செலவை மிச்சப்படுத்த பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

நொய்டா நகரில் உள்ள தாவரவியல் பூங்காவை டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் பகுதியுடன் இணைக்கும் 12.5 கி.மீட்டர் தூரம் கொண்ட புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர், நொய்டா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வரும் 2022-ம் ஆண்டு இந்தியா தனது 75-வது சுதந்திர நாளை கொண்டாடவுள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களின் அளவை குறைக்க விரும்புகிறேன்.

இதற்காக, பொது போக்குவரத்து வாகனங்களை மக்கள் பயன்படுத்தினால் சாமான்ய மக்கள் பணத்தை மிச்சப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கும் உதவிகரமாக இருக்கும்.

கடந்த 24-12-2002 அன்று அந்நாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் முதன்முதலாக மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்ததுடன் புதிய ரெயிலில் பயணம் செய்தார். அது வரலாற்று சிறப்புக்குரிய சம்பவம். அன்றிலிருந்து மெட்ரோ ரெயில் வழித்தடங்கள் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளன.

போக்குவரத்துக்கான இணைப்பு இல்லாமல் போனால் வாழ்க்கை ஸ்தம்பித்து விடுவோம். இந்த மெட்ரோ ரெயில் வழித்தட இணைப்பு இந்தகால தலைமுறையினருக்கு மட்டுமின்றி, எதிர்கால சந்ததிகளுக்குமான பரிசாகும்.

தனி வாகனங்களில் செல்வதைவிட பொது போக்குவரத்து வாகனங்களில் செல்வதற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நமது மனநிலை மாற வேண்டும். மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வது கவுரவத்திற்குரியது என்ற மனப்பக்குவம் உருவாக வேண்டும்’ என்று கூறினார்.

Similar News