செய்திகள்

கோர்ட் உத்தரவிட்டும் படம் திரையிடப்படாததால் மத்திய அரசை சாடும் ‘எஸ் துர்கா’ இயக்குநர்

Published On 2017-11-29 16:15 GMT   |   Update On 2017-11-29 16:15 GMT
கோர்ட் உத்தரவிட்ட பின்னரும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தனது படம் திரையிடப்படாததால் மத்திய அரசு மீது எஸ்.துர்கா பட இயக்குநர் சணல் குமார் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
பனாஜி:

கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது. சுமார் 200 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டது.

இந்த விழாவில் திரையிடப்படுவதற்கான இந்திய திரைப்படங்கள், மற்றும் விருதுக்குரிய திரைப்படங்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடுவர் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘எஸ். துர்கா’ என்ற மலையாளப் படம் மற்றும் ‘நியூட்’ (நிர்வாணம்) என்ற மராத்தி மொழிப் படம் ஆகிவற்றை நீக்கம் செய்து திரையிடப்படும் இந்திய படங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.

இது தேர்வுக்குழு தலைவர் மற்றும் நடுவர்களில் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து பிரபல பாலிவுட் இயக்குநர் சுஜோய் கோஷ் விலகினார். அவரை தொடர்ந்து மேலும் இரு உறுப்பினர்களும் பதவி விலகியதால் கோவா திரைப்பட விழா தொடர்பாக சர்ச்சை தொடங்கியது.

இதற்கிடையில், தனது இயக்கத்தில் வெளியான ‘எஸ். துர்கா’ என்ற மலையாளப் படத்தை தேர்வு பட்டியலில் இருந்து நீக்கியது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து அப்படத்தின் இயக்குநர் சனல் குமார் சசிதரன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, இந்திய திரைப்படங்கள் பட்டியலில் ‘எஸ் துர்கா’ திரைப்படத்தையும் சேர்த்து திரையிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு (விடுமுறைக்கால தற்காலிக) நீதிபதி அந்தோணி டோம்னிக் முகம்மது முஸ்தாக் கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா வரும் 28-ம் தேதி முடிவடைவதால் இறுதி செய்யப்பட்ட பட்டியலை மாற்றுவதும், எஸ்.துர்கா படத்தை இணைப்பதும் சாத்தியமற்றது என்பதால் முன்னர் கேரள ஐகோர்ட்டின் நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவினை ரத்து செய்த ஐகோட்டு அமர்வு, முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்தப் படம் நேற்று முன்தினம் (27-ம் தேதி) திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வேறொரு காரணத்துக்காக அப்படத்தை திரையிட இயலாது என அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, நேற்றிரவு இந்தப் படம் கோவா திரைப்பட விழா நடுவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் பெயர் திரையில் தோன்றும்போது S Durga என்பதற்கு பதிலாக "S### Durga" என்று இடம்பெற்றதால் S என்ற ஆங்கில எழுத்துக்கு பின்னர் அமரும் 3 ### (ஹேஷ்டாக்) செக்ஸி என்ற அர்த்தத்தின் பக்கம் பார்வையாளர்களை திருப்பிவிடும் என்பதால் நடுவர் குழுவில் உள்ள 11 பேரில் 4 பேர் இந்தப் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், இப்படத்தை போட்டிக்கு அனுப்பும்போது எஸ் துர்கா என்றும் பின்னர் திரையில் "S### Durga"  என்றும் தோன்றியது தொடர்பாக இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அளித்த திருவனந்தபுரம் சென்சார் போர்டுக்கு கோவா திரைப்பட விழா நடுவர்கள் புகார் அளித்ததாக தெரிகிறது.



இதையடுத்து, முன்னர் தணிக்கை செய்தபோது அறிவுறுத்தப்பட்ட வெட்டுகள் மற்றும் இடைச்சொருகல்கள் இன்றி இப்படம் உள்ளதா? என்பதை மறுதணிக்கை செய்யும்வரை எஸ் துர்கா படத்தை திரையிட கூடாது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவுறுத்தி திருவனந்தபுரம் சென்சார் போர்டு நேற்று கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் சணல் குமார் சசிதரன், “இதில் எனக்கு சிறிதும் மகிழ்ச்சி இல்லை, இன்னொரு பக்கம் சங் பரிவார்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்பதை பலர் தெரிந்து கொண்டார்கள் என்பதில் மகிழ்ச்சியே” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால், தங்களது நோக்கம் நிறைவேற எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது புரியவைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு பிடிக்காததை தகர்க்க சட்டம் மற்றும் நீதித்துறையை கூட தவறாக பயன்படுத்துவார்கள்” என்று காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
Tags:    

Similar News