செய்திகள்
இமாச்சல பிரதேச தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஊழலுக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது: இமாச்சல பிரதேசத்தில் மோடி தேர்தல் பிரசாரம்

Published On 2017-11-02 13:41 IST   |   Update On 2017-11-02 13:42:00 IST
ஊழலுக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்று இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர பேசினார்.
சிம்லா:

68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபைக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றவும் அங்கு போராடுகிறது.

காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக இருக்கும் வீரபத்ர சிங்கும், பாரதிய ஜனதா சார்பில் பிரேம்குமார் தூமலும் முதல்-மந்திரி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு 1 வாரமே இருப்பதால் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா ஏற்கனவே இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்தில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார்.

பதேபூர் தொகுதியில் உள்ள ரேகன் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

இமாச்சல பிரதேச மாநிலம் வீரம் நிறைந்த பூமியாகும். ராணுவ வீரர்களின் பங்களிப்பும், தியாகமும் விலை மதிப்பற்றது. நமது ராணுவ வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் ராணுவ வீரர்களின் தியாகத்தை அவமதித்து விட்டனர்.


காங்கிரஸ் கட்சி தற்போது ஊழல், குடும்பம், சாதிகளை சமாதானப்படுத்துவது ஆகிய உடன்பாட்டில் உள்ளது. இந்த மாநிலத்தை கொள்ளையடித்தவர்கள் வீட்டுக்கு செல்லும் நேரம் வந்து விட்டது.

நவம்பர் 9-ந்தேதி உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. ஊழல் செய்தவர்களை இந்த மாநிலத்தை விட்டு வெளியேற்றுங்கள். தாமரை மலர்ந்தால் இமாச்சல பிரதேசத்தில் ஊழலுக்கு முடிவு கட்டப்படும்.

இமாச்சல பிரதேச முல்-மந்திரி மீது கடும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ தனது தேர்தல் அறிக்கையில் ஊழலுக்கு துளி கூட இடமில்லை என்று தெரிவித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி இங்கு நகைச்சுவை கிளப்பாக (மன்றம்) இருக்கிறது.

ஊழலுக்கு எதிராக போராடுவதாக காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் மாநில முதல்வரோ ஜாமீனில் தான் உள்ளார். பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தால் இங்குள்ள மக்களின் கனவை நிறைவேற்றுவோம் என்று என்னால் உறுதி அளிக்க முடியும். கொள்ளை கும்பல் விரட்டியடிப்பதற்கு உங்களுக்கு இதுவே சரியான நேரம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி மீண்டும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

Similar News