செய்திகள்
விவசாயிகளை சிங்கப்பூர் சுற்றுலாவுக்கு சந்திரபாபு நாயுடு அனுப்பி வைத்த காட்சி.

அமராவதி நகர் உருவாக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சிங்கப்பூர் சுற்றுலா: சந்திரபாபு நாயுடு ஏற்பாடு

Published On 2017-10-31 07:58 GMT   |   Update On 2017-10-31 07:58 GMT
அமராவதி நகர் உருவாக நிலங்களை வழங்கிய விவசாயிகளை, 3 கட்டமாக 100 விவசாயிகளை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்துள்ளார்.
திருமலை:

ஆந்திர மாநிலம் 2-ஆக பிரிக்கப்பட்டதால் தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றது. இதனால் ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதி உருவாக்கப்பட்டு வருகிறது. அமராவதிக்கு ஏராளமான விவசாயிகள் நிலங்களை வழங்கி உள்ளனர்.

தலைநகருக்காக தங்கள் விவசாய நிலங்களை வழங்கிய விவசாயிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 3 கட்டமாக 100 விவசாயிகளை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் முதல் கட்டமாக 34 விவசாயிகள் வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து நேற்று பஸ் மூலம் விமான நிலையத்துக்கு சென்றனர்.

இந்த வாகனத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆந்திர மாநிலம் பிரிந்த பிறகு தலைநகர் இல்லாத நிலையில் நமக்கென்று தலைநகர் உருவாக்க விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பெற முயற்சி செய்தோம்.

99 சதவீதத்தினர் முழு திருப்தியுடன் மாநில வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றும், என் மீது வைத்த நம்பிக்கைக்காகவும் 34 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை வழங்கியுள்ளனர். அவ்வாறு வழங்கியவர்களுக்கு மாற்று இடம் வழங்கியது மட்டுமின்றி ரூ.2500 பென்‌ஷன் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி, நல்ல மருத்துவ வசதி, திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

இத்தனை காலம் விவசாயம் செய்துவந்த நிலையில் உங்கள் ஆலோசனைகளை மாற்றிக் கொண்டு இதன்பிறகு வியாபாரம் செய்ய வேண்டும். 55 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டது.

சிறிய தீவாக இருந்த சிங்கப்பூர் 50 ஆண்டுகளில் உலகமே கவரும் நாடாக வளர்ச்சியடைந்துள்ளது. பாலைவனமாக உள்ள துபாய் ஒரு சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. அங்கு கடல் நீரை சுத்திகரித்து குடிக்கும் நிலை உள்ளது.


பிரம்மாண்டமாக உருவாகும் அமராவதி

ஆனால் நம் மாநிலத்தில் நதி, கடற்கரை பரப்பு உள்ளது. அனைத்து வசதிகள் கொண்ட நம் மாநிலத்தை உலகமே வியக்கும் வகையிலான தலைநகரமாக அமராவதி மாற்றப்பட வேண்டும். சர்வதேச அளவில் முதல் 10 இடத்தில் அமராவதி கொண்டுவரப்படும்.

புதிய தலைமை செயலகம் உயர்நீதி மன்றம், சட்டப்பேரவை கூடம் அமைப்பதற்கு வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அனைத்து விதமான படிப்புகளும் நம் மாநிலத்தில் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான மருத்துவமனைகள் அமைய உள்ளது. 9 நகரம், 25 டவுன்ஷிப் அமைய உள்ளது. வளர்ந்த நாடாக உள்ள அமெரிக்காவில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் நம் அமராவதியில் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் கொண்டுவர உள்ளோம்.

சிங்கப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்னையே இல்லை. அவர்கள் தங்களுக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தியுள்ளனர். சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக அங்குள்ள விவசாயிகள் தங்களது நிலத்தை வழங்கி எப்படி வளர்ச்சியடைந்தார்கள் என்பதை நம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக இடம் கொடுக்க விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக தான் இந்த சுற்றுலாவை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.





Tags:    

Similar News