செய்திகள்

விறகடுப்பு புகையினால் 5 லட்சம் பெண்கள் உயிரிழப்பு: தர்மேந்திர பிரதான் பேச்சு

Published On 2017-09-23 13:50 GMT   |   Update On 2017-09-23 13:50 GMT
நாடு முழுவதும் விறகடுப்பு புகையினால் சுமார் ஐந்து லட்சம் பெண்கள் உயிரிழந்துள்ளனர் என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

குஜராத்: 

குஜராத்தின் காந்திநகர் மாவட்டம் இஷான்பூர் மோத்தா கிராமத்தில் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், மாநில முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஏழை எளிய பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் போது பேசிய அவர், "விறகு அடுப்பால் ஏற்படும் புகையால் 5 லட்சம் பெண்கள் உயிரிழந்துள்ளனர். அடுப்பு புகையால் பெண்கள் உயிரிழப்பதை தடுக்க இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு தரப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் தூய்மையான ஆற்றலை நோக்கிய பெண்கள் பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாக இருக்கும்", என கூறினார்.
 
அதன்பின்னர் பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இத்திட்டத்தை தொடங்கிய பிரதமர் மோடிக்கும், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கும் நன்றி தெரிவித்தார். இதே போல அடுத்த ஒன்றரை ஆண்டிற்குள் நாடு முழுவதும் ஒரு லட்ச பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News