செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் சிறை சென்ற சாமியார் குர்மீத் ராம் ரகீமிற்கு பத்ம விருது வழங்க 4,208 பேர் பரிந்துரை

Published On 2017-08-31 20:49 IST   |   Update On 2017-08-31 20:49:00 IST
கற்பழிப்பு வழக்கில் சிறை சென்ற தேரா சச்சா சவுதா அமைப்பின் சாமியார் ராம் ரகீம் சிங்கிற்கு 2017ம் வருடத்திற்கான பத்ம விருது வழங்க வேண்டும் என 4,208 பேர் பரிந்துரை செய்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத் ராம்ரகீம் சிங் தனது இரு பெண் சீடர்களை கற்பழித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். கடந்த 25-ம் தேதி ராம்ரகீம் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்தனர். இதுபற்றிய வழக்கில் கடந்த 28-ம் தேதி அவருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் மொத்தம் 20 வருட சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில், பத்ம விருது வழங்குவதற்கான பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் கோரியது. இதைத்தொடர்ந்து, பத்ம விருதுகளுக்காக சுமார் 18,768 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதில், மிகவும் அதிக அளவாக 4,208 பேர் தேரா சச்சா சவுதா அமைப்பின் சாமியார் ராம் ரகீம் சிங் பெயரை பரிந்துரை செய்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தொகுத்த தகவலின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. ராம்ரகீம் சிங்கிற்கு பத்ம விருதுகளில் மூன்றில் ஏதேனும் ஒன்றை வழங்கும்படி அவர்கள் கோரியுள்ளனர்.

இவற்றில் அனைத்தும் தேரா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்சா நகரில் இருந்தே வந்துள்ளது. ராம்ரகீமின் பெயரை சிர்சா நகரை சேர்ந்த அமீத் என்பவர் 31 முறையும், சுனில் என்பவர் 27 முறையும் பரிந்துரை செய்துள்ளனர். மேலும், தனக்கு விருது வழங்கக் கோரி ராம்ரகீம் சிங்கே 5 முறை பரிந்துரை செய்துள்ளதும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

Similar News