செய்திகள்

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு

Published On 2017-08-31 13:46 IST   |   Update On 2017-08-31 13:46:00 IST
மும்பையில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்துவிழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:

மும்பையில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த பலத்த மழை காரணமாக அங்கு பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் தெற்கு மும்பையில் இன்று காலை 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

தெற்கு மும்பையின் சவுகத் அலி ரோட்டில் பென்டி பஜாரில் மிக பழமையான 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. அங்கு 10 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர் வசித்து வந்தனர்.

தண்ணீர் சூழ்ந்திருந்ததால் இன்று காலை 8 மணி அளவில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. ஏற்கனவே சேதம் அடைந்திருந்த அந்த கட்டிடம் விழுந்த வேகத்தில் தரைமட்டமானது.

8.40 மணிக்கு இது பற்றி தகவல் கிடைத்ததும் 12 வண்டிகளில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். தேசிய பேரழிவு மீட்பு படையை சேர்ந்த 90 வீரர்களும் விரைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி தவித்த 12 பேர் படுகாயங்கள் அடைந்திருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஜெ.ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 மணி அளவில் அடுத்தடுத்து 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறும் நிலையில், பிற்பகல் நிலவரப்படி பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

Similar News