செய்திகள்

உ.பி. வெள்ளம்: பலி எண்ணிக்கை 103 ஆக உயர்வு

Published On 2017-08-31 00:48 IST   |   Update On 2017-08-31 00:48:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம், பீகார், வங்கதேசம், மராட்டியம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இம்மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. மழை வெள்ளத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதோடு, வெள்ளத்தில் சிக்கி பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 514 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளத்தால் 152 பேர் பலியாகி உள்ளனர். உத்தரப்பிரதேசம், பீகார், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மழை குறைந்துள்ள நிலையில் வெள்ளம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.



மேற்குவங்க மாநிலத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மராட்டிய மாநிலத்தின் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை சுமார் 334 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது, இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது.

Similar News