செய்திகள்

1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அச்சடிக்க பரிந்துரையா? - பொருளாதார அமைச்சக செயலர் பதில்

Published On 2017-08-29 13:59 GMT   |   Update On 2017-08-29 13:59 GMT
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அச்சடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் பதிலளித்துள்ளார்.
புதுடெல்லி:

கடந்தாண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

பணமில்லா பரிவர்த்தனை என்று ஒரு புறம் கூறிக்கொண்டே, புதிதாக அச்சடிக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டுகளை மக்களின் பயன்பாட்டுக்காக ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளாகவே இதுவரை இல்லாத வகையில் 200 ரூபாய் நோட்டுகள் புதிதாக வெளியிடப்பட்டன.

இதே போல 1000 ரூபாய் நோட்டுகளும் வெளியிட மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. புதிய 1000 ரூபாய் நோட்டு என்று சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வைரலாக பரவின.

இந்நிலையில், இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க்.

“1000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிப்பற்கு மத்திய அரசு எந்த பரிந்துரையும் செய்யவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். இதே போல, புதிதாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டு விரைவில் தடை
செய்யப்படலாம் என்ற தகவலையும் அவர் மறுத்துள்ளார்.
Tags:    

Similar News