செய்திகள்

ஐதராபாத்தில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் சப்ளை செய்தவர் கைது

Published On 2017-07-06 16:24 IST   |   Update On 2017-07-06 16:24:00 IST
ஐதராபாத்தில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் சப்ளை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
நகரி:

ஐதராபாத் நகரில் போதை பொருள் விற்பனை நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐதராபாத்துக்கு போதை பொருள் கோவாவில் இருந்து வருவதை போலீசார் கண்டு பிடித்தனர்.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் என்பவன் மூளையாக செயல்பட்டு கோவாவில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து அவனை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த கெல்வினை போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கெல்வின் விசா காலம் முடிந்த பிறகும் சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கி இருந்திருக்கிறார்.

கோவாவில் இருந்து கடத்தி கொண்டு வரும் போதை பொருளை பல பேரிடம் பிரித்து கொடுத்து சப்ளை செய்து இருக்கிறான். கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், சினிமா பிரபலங்களுக்கு என சப்ளை செய்வதற்கு தனித்தனி குழுக்களை அமைத்து விற்பனை செய்து இருக்கிறான்.

இவனிடம் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் போதை பொருள் வாங்கியது அம்பலமாகி இருக்கிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News