செய்திகள்
உ.பி.யில் நடந்த இரு சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் பலி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் இன்று காலை ஒரு காரில் 10க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து, கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேரின் நிலைமை மோசமானதால், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், சீதாபூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். முன்னால் சென்ற லாரியை முந்துவதற்காக கார் வேகமாக சென்றது. அப்போது திடீரென லாரி மீது மோதியது. இதில் காரில் பயணித்த 5 பேரும் அதே இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
இரு விபத்துகள் குறித்து தகவலறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று பிரேதங்களை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மோசமான வானிலை மற்றும் அதிக வேகமாக சென்றதால் விபத்துகள் ஏற்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.