செய்திகள்

ஆன்-லைனில் முன்பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுக்கு செப்டம்பர் மாதம்வரை சேவை கட்டணம் கிடையாது

Published On 2017-07-06 06:55 IST   |   Update On 2017-07-06 06:55:00 IST
ஆன்-லைனில் முன்பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் ரூ.40வரை சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, பொதுமக்களை மின்னணு பரிமாற்றத்துக்கு ஊக்குவிக்கும்வகையில், ஆன்-லைனில் பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகளுக்கு மார்ச் 31-ந் தேதிவரை சேவை கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தது.

பிறகு இச்சலுகை ஜூன் 30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சேவை கட்டண விலக்கு, செப்டம்பர் 30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்மூலம், ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுகட்டுமாறு நிதி அமைச்சகத்திடம் ரெயில்வே அமைச்சகம் கேட்டுள்ளது. 

Similar News