செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கு: இமாச்சல பிரதேச முதலமைச்சருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது

Published On 2017-05-08 17:16 IST   |   Update On 2017-05-08 17:16:00 IST
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இமாச்சல பிரதேச முதலமைச்சர் வீரபத்ர சிங்கிற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

இமாச்சல பிரதேசத்தில் நீண்டகாலமாக முதலமைச்சராக இருந்துவரும் வீரபத்ரசிங் (வயது 83) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகி கைது செய்வதில் இருந்து இடைக்கால தடை பெற்ற வீரபத்ரசிங், அவரது மனைவி ஆகியோர், தங்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ரத்து செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேசமயம், வீரபத்ரசிங் மற்றும் அவரது மனைவி பிரதீபா சிங் மீது சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையை பரிசீலனை செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விரேந்தர் குமார் கோயல், சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு மே 22-ம் தேதி ஆஜராகும்படி வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி பிரதிபா சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இவர்கள் தவிர, குற்றம்சாட்டப்பட்டுள்ள சன்னி லால் சவுகான, ஜோகிந்தர் சிங் கல்தா, பிரேம் ராஜ், வகமுல்லா சந்திரசேகர், லவன் குமார் ரோச் மற்றும் ராம் பிரகாஷ் பாட்டியா ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். முக்கிய குற்றவாளியான எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆனந்த் சவுகான் நீதிமன்றக் காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News