செய்திகள்

2019 பாராளுமன்ற தேர்தல்: பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அணி அமைக்க மம்தா- நவீன் பட்நாயக் முயற்சி

Published On 2017-04-18 08:09 GMT   |   Update On 2017-04-18 08:09 GMT
2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான அணி அமைக்க முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி மற்றும் நவீன் பட்நாயக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புவனேஸ்வரம்:

பாரதிய ஜனதா செல்வாக்கு இல்லாத மாநிலங்களிலும் இந்த கட்சி ஆழமாக காலூன்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காக மோடி, கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் மாஸ்டர் பிளான்களை உருவாக்கி உள்ளனர்.

இதன்படி அசாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது. இதேபோல் மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும், ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளமும் ஆட்சியில் உள்ளன.

ஒடிசா மாநிலத்தில் இன்னும் 2 ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா இப்போதே களத்தில் இறங்கி விட்டது. இதற்காகத்தான் சமீபத்தில் பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டமும் ஒடிசாவில் நடத்தப்பட்டது.

பாரதிய ஜனதா தங்களுக்கு எதிராக களம் இறங்கி இருப்பதால் இந்த கட்சிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜியும், நவீன் பட்நாயக்கும் கருதுகிறார்கள்.



2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு செக் வைக்கும் வகையில் வலுவான கூட்டணி ஒன்றை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மம்தா பானர்ஜி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று புவனேஸ்வரம் வந்துள்ளார். சிட்பண்ட் வழக்கில் கைதான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பண்டோ பத்யாயா புவனேஸ்வரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை நேரில் சென்று பார்ப்பதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார். நாளை புவனேஸ்வரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையே அவர் மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் சந்திப்பு நடப்பது உறுதி என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சந்திப்பின் போது பாரதிய ஜனதாவுக்கு எதிராக எந்த மாதிரி கூட்டணி அமைப்பது என்பது பற்றி விரிவாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News