செய்திகள்

விவசாயிகளை பிரதமர் சந்திக்க உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் விவசாயிகள் சார்பில் முறையீடு

Published On 2017-04-18 00:00 GMT   |   Update On 2017-04-18 00:00 GMT
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போராட்டக்குழு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போராட்டக்குழு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி ஒரு முறையீட்டை முன்வைத்தார். அப்போது போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, உறுப்பினர் பழனிசாமி ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். வக்கீல் கிருஷ்ணமூர்த்தி முறையிட்டதாவது:-

கடந்த வாரம் கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீதான விசாரணையில், விவசாயிகள் தற்கொலையை தொடர்ந்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஏப்ரல் 27-ந்தேதிக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அதே கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் கடந்த 35 நாட்களாக போராடி வருகிறார்கள். அவர்கள் பல சிரமங்களை அனுபவித்துக்கொண்டு போராடி வருகிறார்கள்.

அவர்களுடைய ஒரே கோரிக்கை பிரதமரை சந்தித்து தங்கள் குறைகளை சொல்ல வேண்டும் என்பது தான். பல அரசியல் தலைவர்களும், எம்.பி.க்களும் போராட்ட களத்துக்கு சென்று வாழ்த்து தெரிவிக்கிறார்களே தவிர பிரதமருடனான சந்திப்புக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கில் எங்களையும் சேர்த்துக்கொண்டால் நியாயம் கிடைக்க வழிபிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே பிரதமரை அவருக்கு வசதியான நாளில் தமிழக விவசாயிகளை சந்திப்பதற்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொண்டு எங்கள் வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிபதிகள் நிலுவையில் உள்ள வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. முறையான மனுவை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்து அடுத்தகட்ட விசாரணையின்போது ஆஜராகி வாதத்தை முன்வைக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

Similar News