செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மக்களவை தேர்தலை சந்திப்போம்: பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

Published On 2017-04-11 06:31 GMT   |   Update On 2017-04-11 06:31 GMT
2019 பாராளுமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையில் சந்திப்பது என்று பா.ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது. கோவா, மணிப்பூர் மாநிலங்களின் சிறிய கட்சிகள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது.

தேர்தல் வெற்றி மற்றும் மத்தியில் பா.ஜனதா ஆட்சி 3-ம் ஆண்டை நிறைவு செய்ய இருப்பதையொட்டி பா.ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.



இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜனதா மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பா.ஜனதாவின் 32 கூட்டணி கட்சி பிரதிநிதிகளும், சமீபத்தில் கோவா, மணிப்பூரில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்த கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அகாலிதளம் கட்சி சார்பில் அதன் தலைவரும், முன்னாள் முதல்- மந்திரியுமான பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.



கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகள், திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் குஜராத், இமாச்சலப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் தலைமைக்கு திருப்தி தெரிவித்த கூட்டணி கட்சிகள் அடுத்து 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலையும் பிரதமர் மோடி தலைமையில் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்தும் முக்கியமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. பா.ஜனதா தேர்வு செய்யும் வேட்பாளருக்கு ஒருமித்த ஆதரவு தெரிவிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் வெற்றியால் ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.



இந்த கூட்டத்துக்குப்பின் நிருபர்களிடம் பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி, “ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதுவும் விசாரிக்கப்படவில்லை” என்றார். என்றாலும் ஜனாதிபதி தேர்தலை மனதில் கொண்டே இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிய வருகிறது.

Similar News