செய்திகள்

நடிகை பாவனா கடத்தல் வழக்கு: சுனிலின் நண்பர் வீட்டில் இருந்து மெமரிகார்டு, சிம்கார்டு சிக்கியது

Published On 2017-03-01 11:53 GMT   |   Update On 2017-03-01 11:53 GMT
நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கடத்தல் கும்பல் அதை செல்போனிலும் படம் பிடித்தது. இதில் சுனிலின் நண்பர் வீட்டில் இருந்த மெமரிகார்டு, சிம்கார்டை போலீசார் கைப்பற்றினர்.
பிரபல நடிகை பாவனா மலையாள சினிமா படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண் டிருந்தபோது கடத்தப்பட்டார்.

ஓடும் காரில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கடத்தல் கும்பல் அதை செல்போனிலும் படம் பிடித்தது. இதுபற்றி நடிகை பாவனா துணிச்சலுடன் புகார் தெரிவித்ததை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்பட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய தடயமாக பாவனா ஆபாசமாக படம் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் சுனிலின் செல்போனை கைப்பற்ற போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். சுனிலிடம் விசாரணை நடத்திய போது அந்த செல்போனை கொச்சி அருகே உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து ஆற்று தண்ணீரில் அதை வீசிவிட்டதாக கூறினார்.

அதை தொடர்ந்து கப்பல் படை வீரர்கள் உதவியுடன் அந்த ஆற்றில் நேற்று தேடுதல் வேட்டை நடந்தது. 6 மணி நேரம் ஆற்றில் சல்லடைப் போட்டு தேடியும் செல்போன் எதுவும் சிக்கவில்லை. விசாரணையை திசைத்திருப்பவும், தாமதப்படுத்தவும் சுனில் ஆற்றில் வீசியதாக பொய்யான தகவலை கூறி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதை தொடர்ந்து செல்போனை கைப்பற்ற வேறு வழிகளில் போலீசார் விசாரணையை தொடர்ந்து உள்ளனர்.


சுனில் பாவனாவை கடத்திய மறுநாள் அம்பல புழாவில் தனது நண்பர் மனு என்பவர் வீட்டில் தஞ்சம் அடைந்து உள்ளார். இதை தொடர்ந்து சுனிலை பலத்த பாதுகாப்புடன் மனுவின் வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. வீட்டில் இருந்த அவரது தாயாரிடம் போலீசார் விசாரித்த போது அவர்கள் வீட்டிற்கு சுனில் வந்தது உறுதி செய்யப்பட்டது.

சுனில் குற்ற செயலில் ஈடுபட்டது பற்றி டி.வி. மற்றும் பத்திரிகை மூலம் அறிந்ததும் அவரை தங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் சுனில் தங்களது வீட்டில் தங்கி இருந்த போது செல்போனில் இருந்து சிம் கார்டு, மெமரிக் கார்டை வெளியே எடுக்கும் ‘பின்’னை தனது மகனிடம் இருந்து கேட்டு வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து அவர்கள் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி அங்கிருந்து ஒரு சிம் கார்டு, மெமரிக்கார்டை கைப்பற்றி உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக பாலியல் காட்சி உள்ளதால் அது தொடர்பான தடயம் இதில் உள்ளதா? என்பதை கண்டறிய அவற்றை ஆய்வுக்கு போலீசார் அனுப்பி உள்ளனர்.

Similar News