செய்திகள்

வினாத்தாள் வெளியான விவகாரம்: உயர்மட்ட விசாரணைக்கு ராணுவம் உத்தரவு

Published On 2017-02-27 21:50 GMT   |   Update On 2017-02-27 21:50 GMT
வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தில் கிளார்க், டிரேட்ஸ்மேன், ஸ்ட்ராங்மேன் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக நேற்று முன்தினம் நாடு முழுவதும் 52 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் மராட்டியம் மற்றும் கோவா மாநிலங்களின் சில பகுதிகளில் கடந்த 25-ந் தேதியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தானே குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு, வினாத்தாள் நகல்களும், அதற்கான விடைகள் எழுதப்பட்ட தாள்களையும் கைப்பற்றினர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, துணை ராணுவ வீரர் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வினாத்தாள் வைத்திருந்த 350 மாணவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து புனே மண்டலத்துக்கு உட்பட்ட நாக்பூர், அகமது நகர், கோவா, ஆமதாபாத் உள்ளிட்ட பல்வேறு மையங் களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. முன்கூட்டியே வினாத்தாள் வெளியானதால் ராணுவ அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட நீதி விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டு உள்ளது. தற்போது பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் யாருக்காவது இந்த சம்பவத்தில் தொடர்பு உண்டா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின் இறுதியில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் தெரிவித்து உள்ளது. 

Similar News