செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்கள் மரணம்

Published On 2017-01-30 12:52 GMT   |   Update On 2017-01-30 12:52 GMT
காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்கள், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தனர்.
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்டு வரும் பனிச்சரிவால், அடிவாரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டு வருகிறது. இதில் ராணுவ வீரர்களும் சிக்கி உயிரிழப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்தவகையில் எல்லையோர மாவட்டமான பந்திப்போராவின் குரேஸ் பகுதியில் கடந்த 25–ந் தேதி கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள ராணுவ முகாமுக்கு திரும்பி கொண்டிருந்த வீரர்கள் மீது இந்த பனிக்கட்டிகள் விழுந்து மூடின. இதில் 15 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அதே போல், மீண்டும் மச்சில் செக்டாரில் கடந்த 28-ம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 ராணுவ வீரர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து வந்த ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பனிச்சரிவு அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்பதில் கடும் சிக்கல் நேர்ந்தது. பெரும் போராட்டத்திற்கு பின்னர் 5 ராணுவ வீரர்களும் கடந்த சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனர். 

ஆனால், படுகாயத்துடன் மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்களையும் மச்சிலி செக்டாரில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வர முடியாத அளவுக்கு வானிலை மிகவும் மோசமாக இருந்தது. 

வானிலை ஓரளவு சீரடைந்ததும் 5 வீரர்களும் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்னர் 5 வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Similar News