செய்திகள்

உம்மன்சாண்டியை காருக்குள் சிறைவைத்த தெருநாய்கள்

Published On 2017-01-30 10:09 GMT   |   Update On 2017-01-30 10:09 GMT
கேரளா முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியை தெருநாய்கள் காருக்குள் சிறைவைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம், கண்ணூர், பத்தனம்திட்டா உள்பட பல்வேறு மாவட்டங்களில் தெரு நாய்கள் தொல்லை உள்ளது. சாலைகளில் கூட்டம் கூட்டமாக அலையும் இந்த தெருநாய்களில் பல வெறி நாய்களாக மாறி பொது மக்களை கடித்து குதறுகின்றன. வெறிநாய் கடிக்கு பலர் உயிரிழந்து உள்ள சோக சம்பவங்களும் நடந்துள்ளது.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று தினமும் ஏராளமானவர்கள் நாய் கடிக்கு சிகிச்சை பெறுவதற்காக கேரள ஆஸ்பத்திரிகளுக்கு படை எடுத்தவண்ணம் உள்ளனர்.

தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் இவைகளை கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து தெரு நாய்களை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு மத்திய மந்திரி மேனகாகாந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாய்களை கொல்லக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார். மேலும் மிருகவதை எதிர்ப்பு அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தெரு நாய்களை கொல்வது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தெரு நாய்களிடம் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி சிக்கி தவித்த சம்பவமும் கேரளாவில் நடந்துள்ளது. உம்மன்சாண்டி மிகவும் எளிமையானவர். எந்தவிதமான ஆடம்பரத்தையும் விரும்பமாட்டார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோதும் தற்போது பதவி இல்லாதபோதும் சர்வசாதாரணமாக அரசு பஸ்களிலும், ரெயில்களிலும் பயணம் செய்வார்.

இந்த நிலையில் உம்மன் சாண்டி சொந்த வேலை காரணமாக கோவைக்கு சென்றுவிட்டு ரெயில் மூலம் கோட்டயம் வந்தடைந்தார்.

பஸ் மூலம் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதே அவரது திட்டம். ஆனால் தற்செயலாக அங்கு வந்த கோட்டயம் காங்கிரஸ் தலைவர் சிபிஜோன் தனது காரில் உம்மன்சாண்டியை அழைத்துச்சென்றார். பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சாதாரண ஓட்டலில் சாப்பிடுவதற்காக அவர்கள் சென்றனர். ஓட்டல் அருகே அவர்கள் காரை நிறுத்தியதும் ஏராளமான தெரு நாய்கள் அவர்களது காரை சுற்றிவளைத்துக் கொண்டன. சில நாய்கள் காரின் மீது ஏறி குரைக்க தொடங்கியது.

அந்த காரில் குளிர்சாதன வசதி கிடையாது என்பதால் காரின் கண்ணாடிகளை அவர்கள் இறக்கி விட்டிருந்தனர். நாய்கள் மிரட்டலால் அவர்கள் கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு காருக்குள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த சிலர் இதை பார்த்து விட்டு காருக்குள் இருக்கும் யாரோ தெரு நாய்களிடம் சிக்கிக்கொண்டனர் என நினைத்து கல்வீசி நாய்களை விரட்டியடித்தனர். அதன் பிறகுதான் காருக்குள் இருந்தது முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

தெருநாய்களால் காருக்குள் சிறை வைக்கப்பட்டதால் உம்மன்சாண்டி அதிர்ச்சி அடைந்த நிலையில் காணப்பட்டார். அவர் பொது மக்களிடம் தன்னை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

Similar News