செய்திகள்

இறைச்சிக்காக கால்நடைகளை கொல்வதை தடை செய்ய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

Published On 2017-01-28 00:41 GMT   |   Update On 2017-01-28 00:41 GMT
இறைச்சிக்காக கால்நடைகளை அடித்துக்கொல்வதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுத்துவிட்டது
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த வினீத் சகாய் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில் அவர், இறைச்சிக்காக கால்நடைகளை அடித்து கொல்வதற்கு ஒட்டுமொத்த தடை விதிக்க வேண்டும் அல்லது கால்நடைகளை அடித்து கொல்வதில் இருந்து காப்பதற்கு ஒரே சீரான கொள்கை வகுக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குதாரரின் சார்பில் ஆஜரான வக்கீல், கால்நடைகளை அடித்து கொல்வது, அதற்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக மாநில அரசுகளின் சட்டங்களில் முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

குறுகிய விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கை மேலால் விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதுபற்றி அவர்கள் குறிப்பிடுகையில், “கால்நடைகளை அடித்துக்கொல்வதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு கோர்ட்டு உத்தரவிட முடியாது” என கூறி விட்டனர். 

Similar News