செய்திகள்

டெபாசிட் பணத்தை 1 ரூபாய் நாணயங்களாக செலுத்திய வேட்பாளர்

Published On 2017-01-18 09:29 GMT   |   Update On 2017-01-18 09:29 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் டெபாசிட் பணத்தை, 1 ரூபாய் நாணயங்களாக செலுத்தி தேர்தல் அதிகாரிகளை திணறடித்திருக்கிறார்.
நாக்பூர்:

மகாரஷ்டிர சட்டமேலவையின் நாக்பூர் மண்டல ஆசிரியர் தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் கட்சிரோலி பகுதியை சேர்ந்த வேட்பாளர் விலாஸ் பல்லம்வார் டெபாசிட் தொகையை 1 ரூபாய் நாணயங்களாக செலுத்தி தேர்தல் அதிகாரிகளை திணற செய்துள்ளார்.

மொத்த டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தில் 8500 ரூபாயை 1 ரூபாய் நாணயங்களாக விலாஸ் செலுத்தியிருக்கிறார். இந்த நாணயங்களை எண்ணி முடிக்கவே தேர்தல் அதிகாரிகளுக்கு சில மணி நேரங்கள் ஆனதாம்.

இதுகுறித்து விலாஸ் கூறுகையில் "வார்தா, பந்தாரா, கொண்டியா, சந்திரபூர் மற்றும் கட்சிரோலியைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை. அரசு உரிய மானியம் வழங்க தவறியதால் இவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எனது டெபாசிட் தொகைக்காக எனது தொகுதியை சேர்ந்த அரசு உதவி பெறாத பள்ளி ஆசிரியர்கள் 8500 பேர் ஆளுக்கு 1 ரூபாயாக கொடுத்து உதவினர். எஞ்சிய 15௦௦ ரூபாய் மட்டுமே எனது சொந்த பணம். இவர்களின் நலனுக்காகவே இத்தேர்தலில் போட்டியிடுகிறேன்'' என்றார்.

Similar News