செய்திகள்

5 மாநில தேர்தல்: சோனியா பிரசாரம் செய்வாரா?

Published On 2017-01-18 06:20 GMT   |   Update On 2017-01-18 06:20 GMT
5 மாநில தேர்தலுக்காக சோனியாகாந்தி பிரசாரம் செய்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அவருடைய உடல்நிலையை பொறுத்து நாங்கள் முடிவு எடுப்போம் என்று திக்விஜய்சிங் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கி விட்டன.

ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடக்கும்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேரடியாக சென்று பிரசாரம் செய்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக அவர் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். டெல்லி ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆபரேசனும் நடந்தது.

இதன்பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே சோனியா பங்கேற்றுள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் உள்பட வேறு எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் அவர் பிரசாரம் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பிரசாரம் செய்தால் தான் கட்சிக்கு பலமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி அனைத்து மாநிலங்களிலும் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார். சோனியாகாந்தி பிரசாரம் செய்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அவருடைய உடல்நிலையை பொறுத்து நாங்கள் முடிவு எடுப்போம். ஆனாலும் பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் அவர் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News