செய்திகள்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்: 73 தொகுதிகளுக்கு இன்று மனுதாக்கல்

Published On 2017-01-17 05:32 GMT   |   Update On 2017-01-17 05:32 GMT
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 73 தொகுதிகளுக்கு இன்று மனுதாக்கல் தொடங்கியது.
லக்னோ:

403 தொகுதிகள் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல்கட்ட ஓட்டுப்பதிவு பிப்ரவரி 11-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 8-ந்தேதி இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.

தேர்தல் அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைப் பணிகள் இன்று தொடங்கியது. இதையடுத்து பிப்ரவரி 11-ந்தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 73 தொகுதிகளில் இன்று மனுதாக்கலுடன் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.

உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 15 மாவட்டங்களில் இந்த 73 தொகுதிகள் அடங்கியுள்ளன. மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஷாம்லி, முசாபர் நகர் ஆகிய மாவட்டங்களிலும் பாக்பத், மீரட், காசியாபாத், கவுதம புத்தர் நகர், ஹாபூர், புலந்த் சாகர், அலிகர், மதுரா, ஹத்ராஸ், ஆக்ரா, பெரோ சாபாத், ஈடா, கஸ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடும் பா.ஜனதா கட்சியின் முதலாவது வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் 149 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

இதில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் மகனும் உத்தரப்பிரதேச மாநில பா.ஜனதா பொதுச்செயலாளருமான பங்கஜ் பெயர் இடம் பெற்றுள்ளது. முன்னாள் மாநில தலைவர் லட்சுமிகாந்த், வாஜ்பாய், ராஜஸ்தான் கவர்னரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கல்யாண்சிங்கின் பேரன் சந்தீப்பும் தேர்தலில் குதிக்கிறார்.

முசாபர்நகரில் நடந்த கலவரத்துக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட தற்போதைய எம்.எல்ஏ.க்களான சங்கீத்சோம், சுரேஷ்ரானா ஆகியோருக்கு மீண்டும் தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

லட்சுமிகாந்த் வாஜ்பாய்க்கு மீரட் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சங்கீத்சோம் அட்ராலி தொகுதியிலும், தேசிய செய்தி தொடர்பாளர் மதுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

2012 சட்டசபை தேர்தலை விட கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின்போது முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் பகுதியில் அதிக அளவு பா.ஜனதா வெற்றி பெற்றது. தொடர்ந்து பா.ஜனதா தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ளதா? என்பது இந்த முதல்கட்ட தேர்தலில் தெரிந்து விடும்.

Similar News