செய்திகள்

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது: அச்சுதானந்தனுக்கு சீதாராம்யெச்சூரி கண்டனம்

Published On 2017-01-09 16:10 IST   |   Update On 2017-01-09 16:10:00 IST
திருவனந்தபுரத்தில் மத்திய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.இதில் பேசிய சீதாராம்யெச்சூரி கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசிய அச்சுதானந்தனுக்கு கண்டம் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது.

இவரது மந்திரி சபையில் மந்திரியாக இருந்த ஜெயராஜன் மீது உறவினருக்கு அரசு பதவி வழங்க சலுகை காட்டியதாக புகார் எழுந்ததால் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் தற்போது மந்திரியாக உள்ள மணி மீதான கொலை குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்க முடியாது என்று கோர்ட்டு கூறி உள்ளதால் அவரையும் மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றன.

மேலும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான அச்சுதானந்தனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். சொந்த கட்சியை சேர்ந்தவரே ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதால் முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய செயலாளர் சீதாராம்யெச்சூரி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன், அச்சுதானந்தன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சீதாராம்யெச்சூரியிடம் எழுத்து மூலம் அச்சுதானந்தன் ஒரு புகார் கடிதம் கொடுத்தார். அதில் கட்சி பெயருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி உள்ள முன்னாள் மந்திரி ஜெயராஜன் மற்றும் மந்திரி மணி ஆகியோரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதை ஏற்றுக் கொண்ட சீதாராம்யெச்சூரி இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பின்னர் இதுபற்றி அச்சு தானந்தன் நிருபர்களிடம் கூறும்போது மத்திய கமிட்டி கூட்டத்தில் நான் தெரிவித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீதாராம்யெச்சூரி கூறி உள்ளது மிகவும் திருப்தி அளிக்கிறது. குற்றவாளிகளை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.

இந்த நிலையில் மத்திய கமிட்டி கூட்டம் பற்றியும் அதில் எடுக்கப்பட்ட தீர் மானங்கள் பற்றியும் சீதாராம்யெச்சூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஆலப்புழாவில் கடந்த ஆண்டு நடந்த கட்சி மாநாட்டில் இருந்து அச்சுதானந்தன் வெளிநடப்பு செய்தார். இதற்காக அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய கமிட்டி கூட்டத்தில் வற்புறுத்தினார்கள். அச்சுதானந்தன் மூத்த தலைவர் என்பதால் அவரது செயலுக்காக கண்டனம் மட்டும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது முன்னாள் மந்திரி ஜெயராஜன், மந்திரி மணி ஆகியோர் மீது கட்சி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சுதானந்தன் கடிதம் மூலம் வற்புறுத்தி உள்ளார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் பேசுவது, பேட்டி கொடுப்பது போன்ற செயல்களில் அச்சுதானந்தன் ஈடுபடுவது கண்டனத்திற்கு உரியது, அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News