செய்திகள்

மோடிக்கு அடுத்த தலைமுறையை பற்றிய யோசனை - ராகுல் காந்திக்கு பாராளுமன்றத்தை முடக்குவது பற்றி சிந்தனை: அருண் ஜெட்லி

Published On 2017-01-09 06:05 IST   |   Update On 2017-01-09 06:05:00 IST
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தலைமுறையை பற்றி யோசித்து வரும் நிலையில் ராகுல் காந்தி பாராளுமன்றத்தை முடக்குவது பற்றியே சிந்திப்பதாக அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தலைமுறையை பற்றி யோசித்து வரும் நிலையில் ராகுல் காந்தி பாராளுமன்றத்தை முடக்குவது பற்றியே சிந்திப்பதாக அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

கருப்பு பணம் பதுக்குதலை தடுக்கும் நோக்கில் 500, 1,000 போன்ற உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், இந்த திட்டத்தின் நோக்கம், அது செயல்படுத்தப்பட்ட 2 மாதங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

‘பண மதிப்பு நீக்கம் - கடந்த 2 மாதங்கள் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து வரும் எதிர்க்கட்சிகளையும் குறை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

மிகப்பெரும் வரி இணக்கமற்ற தன்மையால் (வரி ஏய்ப்பு) இந்தியா பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டில் மொத்தமுள்ள 125 கோடி மக்கள் தொகையில் வெறும் 3.7 கோடி பேர் மட்டுமே வருமான வரிதாக்கல் செய்துள்ளனர். அதிலும் வெறும் 24 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் காட்டியுள்ளனர்.

நேரடி மற்றும் மறைமுக வரி ஏய்ப்பு தொடர்பாக இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. இத்தகைய வரி ஏய்ப்பு நடவடிக்கைகளால் வறுமை ஒழிப்பு, தேசிய பாதுகாப்பு, பொருளார முன்னேற்றம் போன்ற முக்கியமான தேவைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது.

ஆனால் மோடி அரசு பதவியேற்ற முதல் நாளில் இருந்தே இத்தகையை நிழல் பொருளாதாரம் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக மிகவும் தெளிவுடன் இருந்தது. இதில் முதல் நடவடிக்கையாக சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

இப்படி கருப்பு பணத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பணமதிப்பு நீக்க திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு மிகுந்த தைரியமும், உறுதியும் தேவைப்பட்டது.

நாட்டின் 86 சதவீத ரூபாய் நோட்டுகள், 12.2 சதவீத மொத்த உள்நாட்டு வளர்ச்சியை உள்ளடக்கிய பணத்தை மதிப்பிழக்க செய்யும்போது குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படுவது இயல்புதான். அப்படித்தான் இந்த நடவடிக்கையும் வலியை ஏற்படுத்தியது. குறுகிய கால விமர்சனம் மற்றும் சிரமத்தையும் ஏற்படுத்தியது.

அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் இடையூறை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் அவை பிற்போக்கு நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் நேர்மையை ஊக்கப்படுத்துவதுடன், நேர்மையற்ற நடவடிக்கைகளை தண்டிக்கிறது.

இந்த நடவடிக்கையால் வலியும், சிரமங்களும் ஏற்பட்டு இருந்த காலம் முடிவடைந்து விட்டது. வங்கிகளுக்கு வெளியே காணப்பட்ட நீண்ட வரிசை தற்போது இல்லை. பொருளாதார வளர்ச்சி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது வளர்ச்சிப்பணிகளுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகளில் ஏராளமான பணம் கையிருப்பு உள்ளது. இந்த டெபாசிட்டுகளால் வட்டி விகிதம் குறையும். இந்த 2 நடவடிக்கைகளும் ஏற்கனவே நடந்து விட்டன.

சந்தையில் புழங்கி வந்த குறைந்த தொகையிலான லட்சம் கோடிகள் தற்போது வங்கி நடைமுறைகளுக்கு வந்துள்ளன. இது நேரடியாகவும், மறைமுகமாகவும் கூடுதல் வரிவிதிப்புக்கு வழி ஏற்படுத்தி உள்ளது. இந்த வங்கி பரிமாற்றம் மூலம் பொருளாதாரம் உயர்வதுடன், இந்த நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் உயரும்.

கடந்த 70 ஆண்டுகளாக பணப்பரிமாற்றம் என்பது பாதி ரொக்கம் மீதி காசோலை என்ற அடிப்படையே இந்தியர்களின் ‘இயல்பு’ ஆக இருந்தது. வரி ஏய்ப்பு என்பது முறையற்றதோ, ஒழுக்கக்கேடோ அல்ல என்று கருதப்பட்டது. அது ஒரு வாழ்க்கை முறையாகவே கருதப்பட்டது. பல்வேறு பொதுநலன்களில் சமரசம் செய்து கொண்டு இந்த இயல்பை பல அரசுகளும் அனுமதித்து வந்தன.

ஆனால் பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கை இந்தியர்களுக்கு ஒரு புதிய ‘இயல்பை’ உருவாக்கி இருக்கிறது. இந்தியா மற்றும் இந்தியர்களின் செலவின துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விளைகிறது.

இத்தகைய மிகப்பெரிய ஒரு நடவடிக்கை எடுத்தும் நாட்டின் எந்த பகுதியிலும் எந்த வித சமூக குழப்பமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாகவே இருந்தன. இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட போராட்டங்கள் அனைத்தும் பயனற்றதாகி விட்டது. இந்த நடவடிக்கை பொருளாதாரத்தை சீர்குலைத்து விடும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் தவறு என்று நிரூபணமாகி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி ஒரு தேசிய கட்சியாக இருந்தபோதும், தொழில்நுட்பம், மாற்றம் மற்றும் சீர்திருத்தங்களை எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது அபத்தமானது. அது கருப்பு பணத்துக்கு ஆதரவான நிலையையே கொண்டு இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர். நவீன, தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தை பற்றியே அவர் சிந்தித்து வருகிறார். தற்போது அரசியல் நிதி நடைமுறைகளை தூய்மைப்படுத்துவது குறித்து பேசி வருகிறார். ஆனால் அவரை எதிர்ப்பவர்களோ, பண ஆதிக்கம், பணப்பெருக்கம் மற்றும் பண பரிமாற்றம் போன்றவை தொடரவே விரும்புகின்றனர்.

பிரதமருக்கும், ராகுல் காந்திக்கும் இடையேயான வேறுபாடு மிகவும் தெளிவானது. பிரதமர் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறார். ஆனால் ராகுல் காந்தியோ, அடுத்த பாராளுமன்ற தொடரை எப்படி சீர்குலைக்கலாம் என்பது பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறார்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். 

Similar News