செய்திகள்
கோப்புப்படம்

ம.பி. முன்னாள் முதல் மந்திரி சுந்தர்லால் பட்வா மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

Published On 2016-12-28 07:40 GMT   |   Update On 2016-12-28 07:43 GMT
மத்தியப் பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க., மூத்த தலைவருமான சுந்தர்லால் பட்வாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தூர்:

11-11-1924 அன்று பிறந்த சுந்தர்லால் பட்வா, ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சியிலும் பின்னர் பா.ஜ.க.விலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

கடந்த 1980-ம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் மாநில முதல் மந்திரியாக முதன்முதலாக பதவியேற்றார். சுமார் ஒருமாதம் வரை அந்த பதவியில் நீடித்த அவர், கடந்த 1990-ம் ஆண்டு இரண்டாவது முறையாக மீண்டும் முதல் மந்திரி ஆனார்.

எனினும், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு பின்னர் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இதனால், இரண்டாவது முறையும் அவரால் தொடர்ந்து தனது ஐந்தாண்டுகால பதவியை நிறைவு செய்ய இயலாமல் போனது.

பின்னர், 1997-ம் ஆண்டில் சின்ட்வாரா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தர்லால், அதற்கு அடுத்த ஆண்டு அதே தொகுதியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

அதையடுத்து, 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஹோசங்காபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வாகி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் கேபினட் அந்தஸ்துடன் கூடிய மந்திரியாக பொறுப்பேற்றார்.

சமீபகாலமாக, தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்துவந்த சுந்தர்லால் பட்வா(92), போபால் நகரில் உள்ள மருத்துவமனையில் இன்றுகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும் மத்தியப் பிரதேசம் மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மருத்துவமனைக்கு விரைந்துவந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சுந்தர்லால் பட்வாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த சுந்தர்லால் பட்வா ஆற்றிய அரும்பணிகள் கட்சி தலைவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றவையாகும்.

மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக அவர் ஆற்றிய நற்பணிகள் நினைவில் கொள்ளத்தக்கவையாகும். கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையான உழைப்பின் மூலம் தன்னை அர்ப்பணித்துகொண்ட அவரது மறைவை அறிந்து கவலை அடைந்துள்ளேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News