செய்திகள்

மக்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க மோடி தயாராக வேண்டும்: லல்லு பிரசாத் சொல்கிறார்

Published On 2016-12-27 04:49 GMT   |   Update On 2016-12-27 04:49 GMT
ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக மக்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க மோடி தயாராக வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

பாட்னா:

ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெரிய அளவில் போராட்டத்தை நடத்த உள்ளது. இதற்காக மக்களின் ஆதரவை திரட்டும் வகையில் ரத யாத்திரை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

பாட்னாவில் நடந்த இந்த நிகழ்ச்சியை ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அடுத்து கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, இன்னும் 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் சீராகி விடும். அதற்குள் நிலைமை சீராகாவிட்டால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்று கூறினார்.

அவர் சொன்னபடி வருகிற 30-ந் தேதியுடன் அவரது 50 நாள் கெடு முடிகிறது. ஆனால், நிலைமை தொடர்ந்து மோசமாகிதான் வருகிறதே தவிர, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

பிரதமர் மோடி கூறிய தன்படி நடக்காததால் மக்கள் தண்டனை கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதை ஏற்க பிரதமர் மோடி தயாராக இருக்க வேண்டும்.

முதலில் கருப்பு பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டு செல்லாது என கூறினார். இப்போது பணம் இல்லா பரிவர்த்தனை என்று புதிய திட்டத்தை கூறுகிறார். அவரால் ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை.

ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த போது, அவர் ஏதோ வித்தை காட்டப்போகிறார் என நினைத்தோம். ஆனால், அவர் ஒட்டு மொத்தமாக குழம்பி மற்றவர்களையும் குழப்பி நாட்டையே கேலிக் கூத்தாக்கி விட்டார். இன்று நாடு ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிடுகிறார். நாட்டை அவர் எந்த பாதையில் வழி நடத்தி செல்கிறார் என்றே தெரியவில்லை.

இந்த பிரச்சினை தொடர்பாக அவருக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் 28-ந் தேதி (நாளை) பெரும் போராட்டத்தை நடத்துகிறது. அதன் பிறகு பாட்னாவில் மிகப் பெரிய ஊர்வலம் ஒன்று நடத்தப்படும்.

உத்தரபிரதேச தேர்தலில் பாரதீய ஜனதா இப்போது களத்திலேயே இல்லை. அங்கு பீகாரில் ஏற்பட்ட நிகழ்வு போல சமாஜ்வாடி கட்சி ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News