செய்திகள்

கருப்புப் பண ஒழிப்பு போரில் இருந்து பின்வாங்க மாட்டேன்: பிரதமர் மோடி சூளுரை

Published On 2016-12-25 09:03 GMT   |   Update On 2016-12-25 09:03 GMT
கருப்புப் பணத்தை ஒழிக்கும் போராட்டத்தில் வெற்றி பெறும்வரை இந்தப் போரில் இருந்து பின்வாங்க மாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ’மான் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக பொதுமக்களுடன் தொடர்புகொண்டு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்தின் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்னும் இந்தப் போர் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி கிடையாது. இந்தப் போரை நாம் வென்றேதீர வேண்டும். இது சுலபமான போர் அல்ல. எனினும், 125 கோடி மக்கள் பக்கபலமாக இருப்பதால் வெற்றிபெறும் வரை இந்தப் போரில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்.

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு அரசு தனது நிலைப்பாட்டில் அடிக்கடி மாற்றங்களை செய்து வருவதை பலர் குறை கூறுகின்றனர். மக்களின் மீது அக்கறை கொண்ட அரசு என்பதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க அவ்வப்போது சில மாற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இந்த நடவடிக்கையில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என வெளியாகிவரும் வதந்திகள் அனைத்தும் தவறானவை.
இந்த முதல்கட்ட நடவடிக்கையை தொடர்ந்து பினாமி சொத்துகள் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News