செய்திகள்

நடப்பு நிதியாண்டில் பி.எப். வட்டி விகிதம் 8.65 சதவீதமாக குறைப்பு

Published On 2016-12-19 13:25 GMT   |   Update On 2016-12-19 13:25 GMT
வருங்கால வைப்பு நிதிக்கு நடப்பு நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
புதுடெல்லி:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2014-15 மற்றும் 2015-16ம் நிதியாண்டுகளில் 8.8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் நடப்பு நிதியாண்டிற்கும் (2016-17) அதே வட்டிவிகிதம் நீடிக்கும் என தகவல்கள் வெளியாகின. பிஎப் அமைப்புக்கு வரக்கூடிய வருமானம் மற்றும் ஏற்கனவே இருக்கும் உபரியை கணக்கில் கொண்டு வட்டி விகிதத்தை மாற்றாமல் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பி.எப். வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வதற்காக பெங்களூரில் இன்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதிக்கு நடப்பு நிதியாண்டில் 8.65 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, வருமானம் தொடர்பான உத்தேச கணிப்பின் அடிப்படையில் 8.62 சதவீதம் வட்டி வழங்க சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டது. எனினும், தொழிற்சங்க உறுப்பினர்களின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக சற்று உயர்த்தி 8.65 சதவீத வட்டி வழங்க அறங்காவலர் குழு முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வருங்கால வைப்பு நிதி வட்டி வட்டி விகிதம் சற்று குறைக்கப்பட்டபோதிலும், மற்ற சிறு சேமிப்பு திட்டங்களின் அளவைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News