செய்திகள்

இந்திய அரசியலில் இருந்து மோடியை விரட்டாமல் ஓய மாட்டேன்: மம்தா சபதம்

Published On 2016-11-28 09:15 GMT   |   Update On 2016-11-28 09:15 GMT
இந்திய அரசியலில் இருந்து மோடியை விரட்டாமல் ஓய மாட்டேன் என்று மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சபதம் செய்துள்ளார்.
கொல்கத்தா:

மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் பொதுமக்களுடன் பேரணியில் கலந்து கொண்ட அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமரின் தடாலடி நடவடிக்கையை கடுமையாக தாக்கிப் பேசினார்.

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. ஆட்டோக்களும் இயங்காமல் ஸ்டாண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் கடைகள், அலுவலகங்கள், மார்க்கெட், திரையரங்கங்கள் போன்றவை மூடி கிடக்கின்றன. வாகனப் போக்குவரத்தும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், கொல்கத்தா நகரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் மத்திய அரசை கண்டித்து இன்று பேரணியாக நடந்து சென்ற மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் நடவடிக்கையை வன்மையாக கண்டித்து, ஆவேசமாக பேசினார்.

ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் யார், யாருக்கு தேவைப்படுகிறது என்று கேட்டறியாமல் திடீரென்று தன்னை கடவுளாக பாவித்துகொண்ட பிரதமர் மோடி, மக்களைப்பற்றி கவலைப்படாமல் இதைப்போன்ற தடாலடி நடவடிக்கையை எடுத்துள்ளார் என தனது பேச்சின்போது மம்தா குறிப்பிட்டார்.

நான் வாழ்கிறேனா? சாகிறேனா? என்பது பிரச்சனையல்ல. ஆனால், இந்திய அரசியலில் இருந்து பிரதமர் மோடியை நீக்காமல் விடமாட்டேன் என்று இன்றைய நாளில் உங்கள் முன்னால் சபதமேற்கிறேன் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.

Similar News