செய்திகள்

பாராளுமன்றத்தில் பேச பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார்?: கபில் சிபல் கேள்வி

Published On 2016-11-25 12:10 GMT   |   Update On 2016-11-25 12:10 GMT
பாராளுமன்ற விவாதத்தில் ரூபாய் நோட்டு பிரச்சனை குறித்து பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் ரூபாய் நோட்டு பிரச்சனை குறித்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன.

இதனையடுத்து நேற்று மதியம் 12 மணிக்கு பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு வருகை புரிந்தார். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அவை அமைதியாக நடைபெற்றது. இருப்பினும் உணவு இடைவெளிக்கு பிறகு மதியம் 2 மணிக்கு பிரதமர் அவைக்கு வரவில்லை. இதனால் மீண்டும் எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாராளுமன்ற விவாதத்தில் ரூபாய் நோட்டு பிரச்சனை குறித்து பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏன் பயப்படுகிறார்? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கபில் சிபல் பேசியதாவது:-

பிரதமர் மோடி பேசினால் அது பாராளுமன்றத்திற்கு வெளியில்தான் பேசுகிறார். அவர்களுக்கு மெஜாரிட்டி இருக்கும் மக்களவையில் கூட ஏன் பிரதமர் பேசுவதில்லை?.

ஏனெனில் அவர்களது சொந்த எம்.பி-க்களை பார்த்தே அவர் பயப்படுகிறார். இந்த பிரதமர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு தகுதியில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News