செய்திகள்

72 மணிநேரம் அவகாசம் அளித்திருந்தால் என்னை புகழ்ந்திருப்பார்கள்: மோடி ஆவேசம்

Published On 2016-11-25 06:38 GMT   |   Update On 2016-11-25 06:39 GMT
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு முன்னர் 72 மணிநேரம் அவகாசம் அளித்திருந்தால் இப்போது வசைபாடுபவர்கள் என்னை புகழ்ந்திருப்பார்கள் என்று பிரதமர் மோடி காட்டமாக கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் ’தடாலடி’ நடவடிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், அரசியலமைப்பு தினமான இன்று, டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

ரூ.500, 1000 நோட்டுகளை ஒழிக்கும் விகாரத்தில் மத்திய அரசு உரிய முன்னேற்பாடுகளை செய்து, தயார்நிலையில் இல்லை என்று அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் தயார்நிலைக்கு வரும் அளவுக்கு நாங்கள் காலஅவகாசம் கொடுக்கவில்லையே என்பதுதான் அவர்களின் உண்மையான வலியும், வேதனையும், ஆதங்கமுமாக உள்ளது.

அவர்களுக்கு 72 மணிநேரம் அவகாசம் அளித்திருந்தால் ’ஆஹா, மோடியைப்போல யாருமே இல்லை’ என்று என்னை புகழ்ந்து இருப்பார்கள்.

சர்வதேச அளவிலான கணக்கெடுப்பில் ஊழல் பெருக்கெடுத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா உயர்ந்த இடத்தில் இருந்ததால்தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தோம். கடந்த 70 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டத்தையும், பொது சட்டத்தையும் தவறாக பயன்படுத்தியவர்கள் நமதுநாட்டை ஊழலில் மூழ்கடித்திருந்தனர்.

நாட்டை தலைநிமிரச் செய்வதற்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாக உள்ளது. இந்த நடவடிக்கையில் சராசரி மக்கள்தான் கருப்புப் பணத்துக்கு எதிரான போர்வீரர்கள். அனைவரும் தங்களது பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம், அவர்களை யாராலும் தடுக்க முடியாது.

தற்போது நாட்டில் உள்ள 100 கோடி மக்களிடம் கைபேசிகள் உள்ளன, நாட்டின் கடைக்கோடி பகுதிகளிலும் கைபேசிகள் புழக்கத்தில் உள்ளன.  

கிராமத்தில் இருக்கும் மக்கள்கூட யாரும் சொல்லிக் கொடுக்காமல் ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்தி வருகின்றனர். அவர்களால் கைபேசிகள் மூலமாகவே பொருட்களைகூட வாங்க முடியும்.

கையில் ரொக்கமாக வைத்திருந்துதான் பணத்தை செலவழிக்க வேண்டும் என்பதில்லை. ‘டிஜிட்டல்’ பணப்பரிவர்த்தனை மூலமாககூட ‘வாட்ஸ் அப்’ தகவல் அனுப்புவதுபோல் பொருட்களை வாங்க முடியும்.

ஒளிவுமறைவில்லாத வெளிப்படைத்தன்மை உருவாக கைபேசி போன்றவற்றின் மூலமாக நடைபெறும் ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News