செய்திகள்

பாராளுமன்ற அமளிக்கு இடையே நாளை பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி

Published On 2016-11-24 16:14 GMT   |   Update On 2016-11-24 16:14 GMT
பாராளுமன்றத்தில் கடும் அமளி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை பஞ்சாப் மாநிலம் செல்கிறார்.
அமிர்தசரஸ்:

பிரதமர் நரேந்திர மோடி நாளை பஞ்சாப் மாநிலம் செல்கிறார். அங்கு பதிந்தா மற்றும் அனந்புர் ஷகிப் பகுதிகள் மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் சண்டிகர் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘பதிந்தா பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்” என்று தெரிவித்தார்.

பின்னர், அனந்த்புரின் கேசர்கத் ஷகிப் பகுதியில் நடைபெறும் 10-வது சீக்கிய குரு, குரு கோபிந்த் சிங்கின் 350-வது ஒளி விழாவில் கலந்து கொள்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடியின் பயணம் அங்குள்ள அரசியல் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு ரத்து தொடர்பாக கடும் அமளி நிலவி வருகிறது. அதேபோல் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளது.  இன்று மாநிலங்களவைக்கு வந்த பிரதமர் ஒரு மணி நேரம் மட்டுமே இருந்துவிட்டு பின்னர் சென்று விட்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பஞ்சாப் மாநிலத்திற்கு செல்கிறார்.

Similar News