செய்திகள்

சாப்பிட சென்ற பிரதமர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரவில்லை: எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி

Published On 2016-11-24 10:16 GMT   |   Update On 2016-11-24 10:16 GMT
உணவு இடைவெளிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு வராததால் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி:

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் பாராளுமன்ற பணிகள் முடங்கின. வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும், பிரதமர் மோடி விவாதத்தில் பங்கேற்கவேண்டும் என்ற முழக்கம் இன்றும் நீடித்தது.

இந்நிலையில், மதியம் 12 மணிக்கு அவை கூடியபோது, பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு வந்தார். எனவே, எதிர்க்கட்சிகள் இனி விவாதத்தை தொடங்கலாம் என நிதி மந்திரி அருண் ஜெட்லி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியடைந்து விவாதத்தில் கலந்துகொண்டு பேசினர். காங்கிரஸ் தரப்பில் குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தங்கள் தரப்பு கருத்துக்களை முன் வைத்தனர். இதனை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்தார். விவாதத்தில் பிரதமர் பேசுவார் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ஒரு மணிக்கு பிறகு உணவு இடைவெளிக்காக ஒரு மணி நேரம் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.  2 மணிக்கு பின்னர் அவை தொடங்கிய போது அங்கு பிரதமர் நரேந்திர மோடி இல்லை.

பிரதமர் மோடி இல்லாததை கண்டித்து எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை 3 மணிக்கு கூடிய போது பிரதமர் இல்லாததை கண்டித்து எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் பேசுவார் என்று எதிர்ப்பர்க்கப்பட்ட நிலையில் இரு அவைகளும் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது ஏமாற்றத்தை தந்துள்ளது.

Similar News