செய்திகள்

ரூபாய் நோட்டு மாற்றம்: ஐகோர்ட்டுகளில் உள்ள வழக்குகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2016-11-18 20:20 IST   |   Update On 2016-11-18 20:20:00 IST
ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக ஐகோர்ட்டுகளில் உள்ள வழக்குகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுடெல்லி:

மத்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பாராளுமன்றத்திலும் பிரச்சினை எழுப்பியுள்ளனர். ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று திடீரென அறிவித்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இத்திட்டத்திற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு உள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடை விதிக்கக்கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி ஏ.ஆர்.தேவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஐகோர்ட்டுகளில் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

‘மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருப்பது என்பது, கவனத்தில் கொள்ள வேண்டிய தீவிர பிரச்சினையாகும். பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் நீதிமன்றங்களை நாடுகின்றனர். மக்கள் தீவிரமாக உள்ளனர். கலவரத்தில்கூட ஈடுபடலாம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கிய அட்டர்னி ஜெனரல், தற்போது பணம் எடுப்பதில் உள்ள சிரமத்தை போக்க பெட்ரோல் பங்க்குகளில் ஸ்டேட் வங்கி ஸ்வைப் மெஷின் மூலம் 2000 ரூபாய் வரை பணம் எடுக்க முடியும் என்று கூறினார்.

Similar News