செய்திகள்

மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்கிறதா ஸ்டேட் வங்கி? மாநிலங்களவையில் அருண் ஜெட்லி பதில்

Published On 2016-11-16 13:43 GMT   |   Update On 2016-11-16 13:43 GMT
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடன்களை மோசமான வாராக்கடன் பட்டியலில் சேர்த்து ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்வதாக வெளியான தகவல் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றி வருகின்றனர். மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை, வங்கிக் கணக்கில் இருந்தும் ஏ.டி.எம். மூலமாகவும் எடுப்பதற்கு பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டிய இந்த சூழ்நிலையில், கோடீஸ்வரர்களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கடனை வாங்கிய சுமார் 63 கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இவர்களில் 63 கோடீஸ்வரர்களின் கடன்தொகை முழுமையாகவும், 31 பேரின் கடன் தொகையில் பாதியும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது.

இந்த பட்டியலில் ரூ.1,201 கோடி கடன் பெற்றுள்ள விஜய் மல்லையா பெயர் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக கேஎஸ் ஆயில் (ரூ.596 கோடி), சூர்யா பார்மாசூடிகல்ஸ் (ரூ.526 கோடி), ஜிஇடி பவர் (ரூ.400 கோடி) மற்றும் சாய் இன்போ சிஸ்டம் (ரூ.376 கோடிகளே) அடங்கும்.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘ஸ்டேட் வங்கி தனது வாராக் கடன் குறித்த தகவல்களை புத்தகப் பதிவில் செயல்படாத சொத்து என்ற பெயரில் என்று பட்டியலிட்டுள்ளது. அவற்றை தள்ளுபடி செய்வதாக குறிப்பிடவில்லை. மத்திய அரசு அந்த கடனை வசூலிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது

‘வங்கிகளின் வசூலாகாத கடன்களை பட்டியலிடும் கணக்குப்புத்தகத்தில் எழுதியிருப்பதால், தள்ளுபடி என்று அர்த்தம் இல்லை. கடனை வசூலிக்கும் முயற்சிகள் தொடர்கிறது’ என்றார்.

Similar News