செய்திகள்

பண மாற்ற திட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2016-11-15 15:58 GMT   |   Update On 2016-11-15 15:58 GMT
மோடி அரசின் பண மாற்ற திட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் உள்ளது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை:

புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசின் திடீரென அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகளில் குவிகின்றனர். பழைய நோட்டுக்களை டெபாசிட் செய்யவும் மாற்றுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியும் என்று ஒரு சாராரும், அரசின் நோக்கம் நிறைவேறாது என்று மற்றொரு சாராரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மோடி அரசின் இந்த நடவடிக்கை சாமானியர்களை வெகுவாக பாதித்திருப்பதாக காங்கிரஸ் கடுமையாக சாடி வருகிறது.

இந்நிலையில், மும்பையில் இன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, செய்திளாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூபாய் நோட்டுக்களை மாற்றும் மத்திய அரசின் முடிவினால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் சாமானிய மனிதன் பாதிக்கப்படவேண்டும்? இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுத்தேன் கவிழ்த்தேன் என நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்க்கட்சிகள் அனைவரும் பணமாற்ற விஷயத்தில் ஒன்றாக இருக்கிறோம்.

பணமாற்ற திட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் உள்ளது. ஊழல் உள்ளதால்தான் இத்திட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. கருப்புப் பணத்தை மீட்பதற்கான திட்டம் இதுவல்ல. வங்கிகளில் இப்போது வரிசையில் நிற்பவர்கள் கருப்பு பணம் வைத்திருப்பவர்களா? விவசாயிகளும், அரசு ஊழியர்களும், சாமானியர்களும்தான் வரிசையில் நிற்கின்றனர்.

இத்திட்டத்தினால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை சரிசெய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News