செய்திகள்

1% மக்கள் செய்த தவறுக்காக 99% மக்கள் சிரமப்படுவதா?: மம்தா பானர்ஜி

Published On 2016-11-15 20:04 IST   |   Update On 2016-11-15 20:04:00 IST
நாட்டில் உள்ள 1% மக்கள் செய்த தவறுக்காக 99% மக்கள் சிரமப்படுவதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
புது டெல்லி:

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அன்றாடத் தேவைகளுக்கான பணத்திற்கே மக்கள் வங்கிகளை நாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் இணைந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நாளை சந்தித்து இதுகுறித்து மம்தா பானர்ஜி முறையிடவிருக்கிறார்.

இந்நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க டெல்லி வந்த மம்தா பானர்ஜி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் "கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்திய அரசு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் நாடு முழுவதும் மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

நாட்டில் உள்ள 1 சதவீத ஊழல்காரர்களால் 99 சதவீத பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் இந்த அதிரடி திட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இது குறித்து நாங்கள் முறையிட உள்ளோம்" என்றார்.

Similar News