செய்திகள்

ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசின் நடவடிக்கைக்கு உ.பி. காங்கிரஸ் தலைவர் ஆதரவு

Published On 2016-11-14 10:29 GMT   |   Update On 2016-11-14 10:31 GMT
புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து, புதிய கரன்சி வெளியிட்டுள்ள மத்திய அரசின் நடவடிக்கையை உ.பி. காங்கிரஸ் தலைவர் ஆதரித்துள்ளார்.
லக்னோ:

கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் முயற்சியாக மத்திய அரசு, புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து அவற்றை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம் என கூறியுள்ளது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது.

இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரும், உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஹரிகேஷ் பகதூர் தான் அந்த தலைவர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் தடை சரியான நடவடிக்கை. நிதி ஒழுங்குமுறையை மீட்டெடுக்கவும், பொருளாதாரத்தை சீராக்கவும் தேவையான நடவடிக்கை இது. இதன்மூலம் கருப்பு பணம் வெளியேவரும். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை குறைக்க பயனுள்ள நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்றார்.

கோரக்பூர் தொகுதியில் 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று இரண்டு முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார் பகதூர்.

உ.பி.யில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், பகதூரின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Similar News