செய்திகள்

ஊழல் செய்து சம்பாதித்த அரசியல்வாதிகள் எதிர்க்கின்றனர்: அமித்ஷா பாய்ச்சல்

Published On 2016-11-14 05:55 GMT   |   Update On 2016-11-14 05:55 GMT
ரூ.500, ரூ.1000 ஒழிப்பு நடவடிக்கையை ஊழல் செய்து சம்பாதித்த அரசியல்வாதிகள் எதிர்க்கின்றனர் என்று அமித்ஷா பேசியுள்ளார்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பாரதிய ஜனதா சார்பில் நடந்த பரிவர்த்தனா யாத்ரா நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி மிகவும் புத்திசாலித்தனமாக வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளார். இதனால் தான் இன்று 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

ஆனால் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், கெஜ்ரிவால் கட்சி போன்றவை இந்த முடிவை எதிர்க்கின்றன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மக்கள் மீது பெரிய கரிசனம் வந்தது போல நாடகமாடுகிறார்.

பிரதமர் மோடி எடுத்த முடிவை ஏன் இவர்கள் எதிர்க்க வேண்டும். இவர்கள் கண்டிப்பாக எதிர்க்கத்தான் செய்வார்கள். இவர்களெல்லாம் பணத்தை பதுக்கி வைத்திருப்பதால் தான் எதிர்க்கிறார்கள்.

யார், யார் எல்லாம் ஊழல் செய்து பணத்தை பதுக்கி வைத்திருந்தார்களோ, அவர்களுடைய பணம் இன்று மதிப்பற்று போய்விட்டது. எனவே ஊழல் செய்து சம்பாதித்த அரசியல்வாதிகள் தான் பிரதமரின் இந்த முடிவை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த முடிவால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பாரதிய ஜனதா நன்றாகவே உணர்ந்திருக்கிறது. ஆனால் இது ஒரு தற்காலிக பாதிப்பு. இது எல்லாம் சரியாகிவிடும். சாதாரண மக்கள் மட்டுமல்ல, பாரதிய ஜனதாவின் ஒவ்வொரு தொண்டனும் கூட இதில் பாதிக்கப்பட்டிருக்கிறான்.

ஒருவருக்கு நோய் ஏற்பட்டிருந்தால் டாக்டர் அவனுக்கு ஆபரே‌ஷன் செய்து கட்டுபோடுவார். ஆனால் சில நாட்கள் மட்டும் இந்த கட்டுப்போட வேண்டியது இருக்கும். ஆனால் ஆயுளுக்கும் அவன் நன்றாக இருப்பான். அதுபோலத்தான் மக்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதை மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News