செய்திகள்

காவிரி நதி நீர் பிரச்சினையில் கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் தொடரும்: சித்தராமையா

Published On 2016-11-01 07:46 IST   |   Update On 2016-11-01 07:46:00 IST
காவிரி நதி நீர் பிரச்சினையில் கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் தொடரும் என்று ராஜ்யோத்சவா தின உரையில் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1-ந்தேதி கர்நாடகம் உதயமான நாள், ராஜ்யோத்சவா தினமாக கர்நாடக அரசு கொண்டாடி வருகிறது. அதேப் போல் இந்த ஆண்டு ராஜ்யோத்சவா தினம் இன்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த ராஜ்யோத்சவாவை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு முதல்-மந்திரி சித்தராமையா அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் வாழ்த்து தெரிவித்து நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கன்னடர்கள் அனைவருக்கும் ராஜ்யோத்சவா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சிதறி கிடந்த கன்னடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நமது மாநிலம் உருவான இந்த நாள் தான் வரலாற்று சிறப்புமிக்க நாள். இதற்காக உழைத்து, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கன்னடம், கர்நாடகம் மீதான நமது பற்று இந்த நவம்பர் மாதம் மட்டுமே இல்லாமல் அனைத்து நாட்களிலும் நம் மனதில் இருக்க வேண்டும். நாம் பேசும் கன்னட மொழியில் மனிதநேயம், பரஸ்பர சம்பந்தங்கள் உள்ளன. இது நமது கலாசாரம், வரலாறு, நிலம், நீர் வளங்கள் உள்பட எல்லாமும் உள்ளடங்கியுள்ளது.

நிலம், நீர், மொழி பிரச்சினைகளில் கர்நாடகத்திற்கு நிரந்தரமாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்ற மனோபாவம் கன்னடர்கள் மத்தியில் எப்போதும் உள்ளது. காவிரி பிரச்சினையிலும் இத்தகைய வேதனை வெளிப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிப்படும் விவசாயிகளின் ஆக்ரோஷத்தை புரிந்துகொள்ள முடிகிறது.

ஜனநாயகத்தில் அநீதிக்கு உள்ளானவர்கள் போராட்டங்கள் நடத்த அவகாசம் உள்ளது. கூட்டாட்சி நடைமுறையை ஏற்றுக்கொண்ட நாம் அதற்கு மரியாதை கொடுத்தபடியே, நமக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நாம் பொறுமையை இழக்கக்கூடாது. நமது தலையை நாமே சுவற்றில் இடித்து கொள்ளக்கூடாது. கன்னடர்கள் பொறுமையானவர்கள், பொறுப்பானவர்கள் என்ற நம்பிக்கைக்கு நாம் பங்கத்தை ஏற்படுத்தக்கூடாது.

நிலம், நீர், மொழியை பாதுகாக்கும் பணியை நான் காவல்காரன் போல் தொடர்ந்து மேற்கொள்வேன். காவிரி நதி நீர் பிரச்சினையில் கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் நமது போராட்டம் தொடரும். இந்த விஷயத்தில் எங்கள் அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறது. மாநிலத்தின் நலனை காக்க அரசு தயாராக உள்ளது.

இது கட்சி சார்பற்று நடைபெறும் போராட்டம். இதற்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தொடக்க கல்வியை நமது தாய்மொழியான கன்னடத்திலேயே கற்பிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் கன்னடம் மட்டுமின்றி அனைத்து மாநில மொழிகளும் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். தேவைப்பட்டால் அரசியல் சாசனத்திலும் திருத்தம் செய்ய வேண்டும்.

இதற்காக இதர மாநில முதல்-மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்வேன். ஒரு மொழி மீது இன்னொரு மொழியை திணிக்கக்கூடாது. எந்த மொழியாக இருந்தாலும் அதை கற்பதை தடுப்பதும் சரியல்ல. கர்நாடக அரசின் நிர்வாகத்தில் கன்னட மொழி முழுமையாக பயன்படுத்தப் படுகிறது. இதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Similar News