செய்திகள்

சரக்கு மற்றும் சேவை வரி விவகாரம்: மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் உடன்பாடு

Published On 2016-10-19 03:39 GMT   |   Update On 2016-10-19 03:40 GMT
சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட இழப்பீடு வழங்குவதில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில், ஆடம்பர பொருட்களுக்கு அதிகமான வரி விதிப்பது பற்றி ஜி.எஸ்.டி. குழு ஆலோசனை நடத்தியது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வரி விகிதம் எவ்வளவு இருக்க வேண்டும்? அமல்படுத்துவது எப்படி? என்பது பற்றியெல்லாம் முடிவு செய்வதற்காக, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், மாநில நிதி மந்திரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழுவின் 3 நாள் கூட்டம், டெல்லியில், அருண் ஜெட்லி தலைமையில் நேற்று தொடங்கியது.

கூட்டத்தில், 4 வகையான ஜி.எஸ்.டி. வரிவிகிதங்களை அமல்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதாவது, 6 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 26 சதவீதம் என 4 வகையான வரி விகிதங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இவற்றில், சொகுசு கார் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கும், புகையிலை, சிகரெட், குளிர் பானங்கள் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களுக்கும் அதிகபட்ச வரிவிகிதமான 26 சதவீத வரி விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அத்துடன், அந்த பொருட்கள் மீது கூடுதல் வரி (செஸ்) விதிப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டது. இந்த கூடுதல் வரி மூலம் கிடைக்கும் தொகை, மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க பயன்படுத்தப்படும் என்று மத்திய வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்தார்.

அதே சமயத்தில், அத்தியாவசிய பொருட்கள் மீது குறைந்தபட்ச வரிவிகிதமான 6 சதவீத வரி விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. உணவு பொருட்களுக்கும், பரவலாக பயன்படுத்தப்படும் 50 சதவீத பொருட்களுக்கும் வரி விலக்கு அளிப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டது.

வரிவிகிதம் பற்றி இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதையடுத்து, எந்தெந்த பொருட்களை எந்தெந்த வரிவிகிதத்தில் சேர்க்கலாம் என்பது பற்றி நாளை ஆலோசனை நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில், முக்கிய திருப்பமாக, ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டது.

இதுகுறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் 5 வகையான மாற்றுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நாளையும் (இன்று) ஆலோசனை தொடரும்.

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகளில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. ஒரு மாநிலத்தின் வருவாயை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2015-2016 ஆக இருக்கும். 14 சதவீத வளர்ச்சி விகிதம் என்பதை அடிப்படையாக கொண்டு, ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்த, முதல் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் வருவாய் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிடுவோம். அதற்கு குறைவாக வருவாய் பெறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும்.

ஓட்டெடுப்புக்கு வாய்ப்பின்றி ஒவ்வொரு முடிவையும் கருத்து ஒற்றுமையுடன் எடுத்து வருகிறோம். வரி செலுத்துவோர் மீது சுமை ஏற்றக்கூடாது என்பதே வரிவிகிதம் நிர்ணயிப்பதன் நோக்கமாக இருக்கும்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Similar News