செய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு: பிரணாப் முகர்ஜி- மோடியுடன் ஆங் சான் சூகி சந்திப்பு

Published On 2016-10-18 12:33 GMT   |   Update On 2016-10-18 12:33 GMT
இந்தியாவிற்கு வந்துள்ள மியான்மர் சிறப்பு ஆலோசகர் ஆங் சான் சூகி, டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்தார்.
புதுடெல்லி:

மியான்மர் அரசின் சிறப்பு ஆலோசகரும் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஆங் சான் சூகி, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் முக்கிய துறைகளின் மந்திரிகள், மூத்த அதிகாரிகளும் வந்துள்ளனர்.

ஆங் சான் சூகிக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்றார். அப்போது தன்னுடன் வந்த உயர்மட்டக் குழுவினரை மோடிக்கு ஆங் சான் சூகி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஆங் சான் சூகி சந்தித்து பேசினார்.

இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாட்டு உறவுகள் புதிய உச்சத்திற்கு செல்லும் என்று சூகி நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஆங் சான் சூகி மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த சுற்றுப்பயணத்தில், இரு தரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வழிகள் தொடர்பாக இந்திய தொழிலதிபர்களிடையே ஆங் சான் சூகி  கலந்துரையாட உள்ளார்.

Similar News