செய்திகள்

குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கினால்தான் மகள் ஆத்மா சாந்தி அடையும்: பினராய் விஜயனிடம் தாய் மனு

Published On 2016-09-21 10:28 IST   |   Update On 2016-09-21 10:28:00 IST
கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கினால்தான் மகள் ஆத்மா சாந்தி அடையும் என பினராய் விஜயனிடம் தாய் மனு அளித்துள்ளார்
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள சொர்னூரைச் சேர்ந்த இளம்பெண் சவுமியா (வயது 21).

இவர், கடந்த 2011-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து சொர்னூருக்கு ரெயிலில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற மாற்றுத்திறனாளி வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு கேரள கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.

ஆனால் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டபோது, கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டு ஜெயில் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கேரள மாநில அரசு இந்த வழக்கை சரிவர நடத்தாததால்தான் குற்றவாளிக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கேரளாவில் எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. முதல்-மந்திரி பினராய் விஜயனின் உருவபொம்மையையும் எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

சவுமியாவின் தாய் சுமதியும் இந்த தண்டனை குறைப்பால் வேதனை அடைந்தார். குற்றவாளிக்கு நிச்சயம் ஆண்டவன் தண்டனை கொடுப்பார் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனை சுமதி சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில், தான் ஆசையாக வளர்த்த மகளை கொடூரமாக கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும். எனவே இதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சந்திப்பின்போது, கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் மெக்ராவும் உடன் இருந்தார். 

Similar News