செய்திகள்

பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்காவிடில் மக்கள் கோபத்திற்கு ஆளாவீர்கள்: அரசுக்கு சிவசேனா எச்சரிக்கை

Published On 2016-09-18 19:48 IST   |   Update On 2016-09-18 19:48:00 IST
உரி தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கா விட்டால் பொதுமக்கள் கோபத்திற்கு ஆளாவீர்கள் என்று பா.ஜனதா அரசிற்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

ஜம்மு - காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையோரம் உரி என்ற முக்கிய நகரம் அமைந்துள்ளது. உரி நகரில் அப்பகுதியில் பணியாற்றும் ராணுவ படைப்பிரிவினருக்கான தலைமை முகாம் ஒன்று இயங்கி வருகிறது.

இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த முகாமுக்கு அரணாக அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலியை வெட்டிவிட்டு முகாமுக்குள் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நுழைந்தனர்.

முகாமின் மீது வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த ராணுவ வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பா.ஜனதா கூட்டணியில் இடம்பிடித்துள்ள சிவசேனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை. அவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்காவிடில் மக்கள் கோபத்திற்குள்ளாவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராட் கூறுகையில் ‘‘உரியில் இன்று நடைபெற்ற தாக்குதல் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்று எங்களால் நம்ப முடியவி்ல்லை. இது பாகிஸ்தானால் திட்டமிட்ட தாக்குதல். தற்போது பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக உடனடியாகவும், உறுதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம். இந்த தாக்குதல்களை உடனடியாக நிறுத்த முடியவில்லை என்றால், பொதுமக்கள் அரசுக்கு எதிராக திரும்புவார்கள்’’ என்றார்.

Similar News