செய்திகள்

மத்திய பிரதேச மாநிலத்தில் தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்

Published On 2016-09-01 08:10 IST   |   Update On 2016-09-01 08:10:00 IST
மத்திய பிரதேச மாநிலத்தில் தாயின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவில் வைத்து, பின்னால் ஒருவரை அமரச் செய்து மகன் எடுத்துச் சென்ற சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சியோனி:

மத்திய பிரதேச மாநிலத்தில் சியோனி மாவட்டம், உலாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி என்ற 70 வயது மூதாட்டி. கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இவரை, பர்கத் என்ற இடத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு நேற்றுமுன்தினம் மகன் பீமாராவ் நாக்புரே அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சென்றடைந்த சிறிது நேரத்தில் பார்வதி இறந்து விட்டார். அவரது உடலை உலாத் கிராமத்துக்கு எடுத்துச் செல்ல மகன் பீமாராவ் ஆம்புலன்சை தேடினார். 108 ஆம்புலன்சு சேவைக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தும் கிடைக்கவில்லை.

இதனால் பீமாராவ், தாயின் உடலை தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றார். ஆனால் 2½ கி.மீ. தொலைவை கடந்த நிலையில் மோட்டார் சைக்கிள் உடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து அங்கு ஒரு பெண்ணின் மூலம் 108 ஆம்புலன்சு சேவையை நாடினார். ஆம்புலன்சு வந்தது. ஆனால் அவரது தாயின் உடலை எடுத்துச் செல்ல மறுத்து விட்டது.

அதைத் தொடர்ந்து உள்ளூர் பிரமுகர் லேக்ராம் ஹிரண்கடேயின் கவனத்துக்கு இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பார்வதியின் உடலை எடுத்துச் செல்ல தனது வாகனத்தை வழங்கி உதவினார். அதன்பின்னர் அந்த வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News