செய்திகள்

பாகிஸ்தான் உளவாளியை 24-ம் தேதி வரை கஸ்டடியில் வைத்து விசாரிக்கிறது போலீஸ்

Published On 2016-08-20 16:28 GMT   |   Update On 2016-08-20 16:28 GMT
ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஜெய்ப்பூர்:

பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நடமாடி வருவதாகவும், ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாகவும் உளவுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அவரை கண்காணித்துவந்த போலீசார், ஓட்டலுக்குச் சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து இந்திய எல்லைப் பகுதி வரைபடங்கள், ராணுவ கட்டமைப்பு தொடர்பான புகைப்படங்களை கைப்பற்றினர். எனவே, அவர் ஐ.எஸ்.ஐ. உளவாளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கைதானவரின் பெயர் நந்து லால். பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் உரிய விசா மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு விசா எடுத்திருந்த இவர், விதிமுறைகளை மீறி ஜெய்சால்மருக்கு வந்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நந்து லால் இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரிடம் மேலும் தகவல்களை பெறவேண்டியிருப்பதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 24-ம் தேதி வரை நந்து லாலை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.

நந்து லால் எல்லைப் பகுதியில் உள்ள சில சமூக விரோத சக்திகள் மற்றும் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களைப் பயன்படுத்தி தகவல்களை சேகரித்திருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News